LATEST NEWS
“திடீரெனக் கேட்ட பயங்கர சத்தம்…” அசுர வேகத்தில் பாய்ந்து வந்த சேற்று வெள்ளம்.. நடுத்தெருவுக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் அக்டோபர் 4-ஆம் தேதி மதியம் ‘மெய் ஷெங் டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அதிலிருந்து வெளியேறிய சேறும் சகதியும் கலந்த வெள்ளநீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவர் இடிந்த அதிர்வில் அசுர வேகத்தில் பாய்ந்து வந்த சேற்று வெள்ளம், மக்களின் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மேலும், வீடுகளில் இருந்த பல மதிப்புமிக்கப் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் தளபாடங்கள் இந்தச் சேற்று வெள்ளத்தில் மூழ்கிப் பலத்த சேதமடைந்தன.
இந்தத் திடீர் விபத்து காரணமாக அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மீட்புக் குழுவினர் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீடுகளுக்குள் புகுந்த சேற்றை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாகச் சுவரின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது கட்டுமானக் குறைபாடா என்பது குறித்து ஹோ சி மின் நகர அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
