விவாகரத்து செய்ய மறுத்ததால் கொடூரம்… உடலில் பற்றிய தீயோடு கிராமத்திற்கு ஓடிவந்த மனைவி… மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்த சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

விவாகரத்து செய்ய மறுத்ததால் கொடூரம்… உடலில் பற்றிய தீயோடு கிராமத்திற்கு ஓடிவந்த மனைவி… மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்த சோகம்..!!

Published

on

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதலில் தொடங்கி நீதிமன்றத் திருமணத்தில் முடிந்த உறவு, மனைவியைப் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர சம்பவத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் 21 வயதான தாமினி தேவி என்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார். இக்கொடூர குற்றத்தைச் செய்த அவரது கணவர் சஞ்சீவ் பிறகு காவல் நிலையத்தில் அவராகவே சென்று சரணடைந்துள்ளார்.

முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாமினி தேவிக்கும், சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் சாவிற்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாற, இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே கசக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement

தாமினியிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் என்று சஞ்சீவ் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சஞ்சீவ் தனது மனைவியைத் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சுற்றிவிட்டு, ரத்தன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கால்வாய் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சமாக, சஞ்சீவ் தனது மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

உடலில் தீப்பற்றிய நிலையில் அலறியடித்தபடி தாமினி அருகில் இருந்த கிராமத்தை நோக்கி ஓடிவந்து உதவி கோரியுள்ளார். கிராம மக்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி தாமினி பரிதாபமாக உயிரிழந்தார். தாமினி இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சரணடைந்த சஞ்சீவையும் அவனது தந்தையையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in