CRIME
“4 வாரம் தான் டைம்..” இளம்பெண் பெண் வழக்கறிஞர் மரண வழக்கில் மாநில அரசுக்கு NHRC கொடுத்த அதிரடி கெடு..!!
செகந்திராபாத் மெடிகோவர் மருத்துவமனையில் இளநிலை வழக்கறிஞர் ஐஸ்வர்யா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெலுங்கானா சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் சைபராபாத் காவல் ஆணையர் ஆகியோருக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 28 வயதான ஐஸ்வர்யா, சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம், அவசியமற்ற அறுவை சிகிச்சை மற்றும் முறையற்ற ஒப்புதல் செயல்முறையே இந்த மரணத்திற்குக் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்கறிஞர் கருபோத்துலா ரேவந்த் அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை முதன்மையாகப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெலுங்கானா மாநில அரசு மற்றும் காவல்துறைக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞரின் இந்த மர்ம மரணம் மற்றும் அதைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை, ஹைதராபாத் மருத்துவ வட்டாரங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
