LATEST NEWS
“நடுராத்திரியில் 3 முறை தட்டப்பட்ட கதவு… கோவிலில் பூ போட்டுப் பார்த்த தாய்… செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திடீர் திருப்பம்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வடிவேலு மற்றும் பவானி. இவர்களின் 7 வயது மகள் ஹேமாவதி, அக்டோபர் 11-ம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அக்டோபர் 12-ம் தேதி அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அவரைக் காணவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் சிறுமி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. குழந்தை மாயமாகி 18 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்காததால், சிறுமியின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் தந்தை, தாய் பவானி, சகோதரி மற்றும் பாட்டி ஆகியோரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சிறுமி காணாமல் போன நாளன்று, அருகில் வசிக்கும் மணிமேகலை என்ற மூதாட்டியின் வீட்டுக் கதவை மர்ம நபர் ஒருவர் மூன்று முறை தட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மை எனில் அந்த மர்ம நபர் யார், அவருக்கும் சிறுமி மாயமானதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாயமான தனது மகள் விரைவில் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் தாய் பவானி கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். வீட்டின் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் தினமும் கற்பூரம் ஏற்றி வேண்டி வரும் அவர், சிவன் கோவிலில் பூ போட்டுப் பார்த்தபோது குழந்தை உயிருடன் இருப்பதாகக் கூறப்பட்டதால், தனது மகள் கண்டிப்பாக மீட்கப்படுவாள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். சிபிசிஐடி போலீசார் சிறுமியை மீட்கத் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், குடும்பத்தினரும் குழந்தை விரைவில் வீடு திரும்புவாள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
