CRIME
“அட என்னப்பா சொல்லுறீங்க..” மாடு மேய்க்கும் பெண்ணுக்கு ரூ.100 கோடி சொத்தா..? வருமான வரித்துறை சோதனையில் வெளிவந்த தலைசுற்ற வைக்கும் உண்மை..!!
ராஜஸ்தான் மாநிலம் சீக்கார் மாவட்டத்தில் உள்ள தீபாவாஸ் என்ற குக்கிராமத்தில் வசித்து வரும் சஞ்சு தேவி மீனா என்ற ஏழைப் பெண்மணி, தனது குடும்பத்தைக் காப்பாற்ற விவசாயம் மற்றும் மாடு மேய்த்துப் பால் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது பெயரில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரது கிராமத்திற்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தியபோது, அந்த ஏழைப் பெண்ணிற்கோ தனது பெயரில் எங்கு, எவ்வளவு நிலம் இருக்கிறது என்ற விபரமே தெரியாது என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்து அதிகாரிகளையே உறைபனிய வைத்துள்ளது. தனது கணவர் இறந்த பிறகு, குடும்பச் செலவிற்காக யாரோ ஒருவர் மாதம் தோறும் 5,000 ரூபாய் அனுப்பி வந்ததாகவும், அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக நின்றுவிட்டதாகவும் சஞ்சு தேவி அதிகாரிகளிடம் அப்பாவித்தனமாகக் கூறியுள்ளார்.
இந்த விசித்திரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் தோண்டியபோது ஒரு மாபெரும் ‘பினாமி’ நில மோசடி அம்பலமாகியுள்ளது. டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள், ராஜஸ்தானின் டெல்லி நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பழங்குடியினருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை, சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறித் தங்களின் சொந்தப் பெயரில் வாங்க முடியாததால், அப்பாவிப் பழங்குடியின மக்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பினாமியாக வாங்கியுள்ளனர். சட்டப்படி பழங்குடியினரின் நிலத்தை மற்றொரு பழங்குடியினர்தான் வாங்க முடியும் என்பதால், இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். பேப்பரில் மட்டுமே சஞ்சு மீனாவின் பெயரில் நிலத்தை வாங்கிவிட்டு, அவரிடமிருந்து பவர் ஆஃப் அட்டர்னி எனப்படும் பொது அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கித் தங்களின் ஆட்களிடம் பத்திரமாக வைத்துள்ளனர்.
மீடியாக்களிடம் பேசிய சஞ்சு மீனா, தனது கணவரும் மாமனாரும் முன்பு மும்பையில் வேலை செய்ததாகவும், அப்போது 2006-ஆம் ஆண்டு தன்னை ஜெய்ப்பூரில் உள்ள ஆமீர் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு காகிதத்தில் கட்டைவிரல் ரேகை வாங்கியதாகவும் நினைவுகூர்ந்துள்ளார். உண்மையில் இந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் சஞ்சு மீனாவிற்குச் சொந்தமானது அல்ல, அவர் வெறும் பெயரளவிலான பினாமி மட்டுமே ஆவார். இந்த நிலத்திற்கான முழுத் தொகையையும் மும்பையைச் சேர்ந்த ‘ஹிரானந்தானி குரூப்’ நிறுவனத்தின் ஒரு அங்கமான ‘ஹேசல்நட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் செலுத்தியுள்ளது. நிலத்தை வாங்குவதற்கு முன்பே, மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் தாராநாத் மல்வான்கர் என்பவரது பெயரில் பொது அதிகாரப் பத்திரம் எழுதப்பட்டுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது. கோடீஸ்வர பினாமிப் பெண்ணின் இந்த அவல நிலை தற்பொழுது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
