CRIME
“இது விபத்து அல்ல..” நீல டிரம்’ வழக்கில் அடுத்த அதிரடி ட்விஸ்ட்.. முக்கிய சாட்சியை முடித்துக்கட்ட நடந்த ஸ்கெட்ச்.. பரபரப்பு பின்னணி..!!
மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல டிரம் கொலை வழக்கு ஏற்கனவே பல கேள்விகளுடன் விவாதப் பொருளாக உள்ள நிலையில், தற்போது அந்த வழக்கின் முக்கிய சாட்சியும், கொல்லப்பட்ட சௌரவ்வின் மூத்த அண்ணனுமான ராகுல் என்கிற பப்லு என்பவரை சொகுசு கார் ஒன்று கொடூரமாக மோதிவிட்டுத் தப்பிய ஓடிய புதிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புதன்கிழமை இரவு மீரட்டின் டெல்லி சாலையில் உள்ள பகதூர் மோட்டார்ஸ் பகுதிக்கு அருகே ராகுல் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர் மீது திட்டமிட்டு மிக பலமாக மோதிவிட்டு நிற்காமல் அதிவேகமாகப் பறந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ராகுல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள ராகுல், இது தற்செயலாக நடந்த சாலை விபத்து அல்ல என்றும், தங்களைக் கொலை செய்யத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதித் தாக்குதல் என்றும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீல டிரம் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான சாஹில் அல்லது முஸ்கானின் குடும்பத்தினர் தான் தங்களைப் பழிவாங்குவதற்காக இந்த விபரீதச் சதியை அரங்கேற்றியுள்ளனர் என அவர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து மீரட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய காரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
