CRIME
அடைகொடுமையே..! கவலைக்கல்லோடு கட்டப்பட்ட உடல்… கிணற்றுக்குள் கிடந்த தார்ப்பாய் பொட்டலம்..! சொந்த அண்ணனையே கூலிப்படை வைத்து தூக்கிய தம்பி..! நெஞ்சை நடுங்க வைக்கும் பின்னணி..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் – லக்கிநாயக்கன்பட்டி சாலையில், ரத்தக்கறைகளும் தலைமுடிகளும் சிதறிக் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் வடபொன்பரிப்பி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அருகிலிருந்த கரும்புத் தோட்டம் மற்றும் விவசாயக் கிணற்றிலும் ரத்தக்கறைகள் இருப்பதையும், கிணற்றின் கவலைக்கல் காணாமல் போயிருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றியும், தீயணைப்புத் துறையினரின் உதவியோடு நீண்ட நேரம் தேடியும் கிணற்றுக்குள் தார்ப்பாயால் சுற்றப்பட்டு, கவலைக்கற்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்றைக் கண்டெடுத்தனர். உடலை மீட்டுப் பார்த்தபோது, அது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், அவர் ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஷ் சம்பவ இடத்திற்கு வந்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, இரண்டரை சென்ட் நிலம் தொடர்பாக ரமேஷுக்கும் அவரது தம்பி ஆனந்துக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததும், இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், சம்பவத்தன்று புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் ரமேஷை அழைத்துச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் ஆனந்த் மற்றும் பன்னீர்செல்வத்தின் செல்போன்கள் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார், விரியூர் காப்புக்காட்டில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வத்தைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிலத்தகராறு காரணமாக அண்ணன் ரமேஷைக் கொலை செய்ய, தம்பி ஆனந்த் ரூ. 15 லட்சம் தருவதாகக் கூறியதால் பன்னீர்செல்வம் இந்தச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்காகக் கடந்த ஒரு வாரமாக ரமேஷுடன் நெருக்கமாகப் பழகிய பன்னீர்செல்வம், கார் வாங்குவது போல் நாடகமாடி அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திரும்பி வரும் வழியில் ரங்கப்பனூர் அருகே உள்ள குறவன் பாதைக்குள் வாகனத்தைத் திருப்பி, ஏற்கனவே மறைந்திருந்த மூன்று பேருடன் சேர்ந்து ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலைத் தார்ப்பாயில் சுற்றி, கற்களைக் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். இக்கொலை தொடர்பாக பன்னீர்செல்வம், சண்முகம், சக்கரவர்த்தி, ஆறுமுகம் மற்றும் ஆனந்தின் மனைவி பரமேஸ்வரி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, 3 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான தம்பி ஆனந்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
