CRIME
“என் சாவுக்கு டாக்டரும், போலீசும்தான் காரணம்” தேள் கடித்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம் – காவல் நிலையம் சென்று வந்த பின் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்..!!
தெலங்கானா மாநிலம் அதிலாபாத் நகரில், தேள் கடித்ததற்கு விரைந்து சிகிச்சை அளிக்குமாறு கேட்ட இளைஞரை போலீஸார் தாக்கியதால் அவர் தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலாபாத் மாற்றுத்திறனாளிகள் காலனியைச் சேர்ந்த ராகுல் காம்ப்ளே (26) என்ற வாலிபர், தேள் கடித்ததன் காரணமாக சிகிச்சைக்காக மன்செரியாலில் உள்ள ரிம்ஸ் (RIMS) அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு விரைவாக மருத்துவ உதவி வழங்குமாறு ராகுல் கோரியபோது, அவருக்கும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், நள்ளிரவில் போலீஸார் ராகுலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தன்னைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவு தாண்டி வீட்டிற்குத் திரும்பிய ராகுல், மிகுந்த மனவேதனையுடன் தற்கொலைக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த கடிதத்தில், “எனது மரணத்திற்கு மருத்துவர்களும், போலீஸாரும் தான் காரணம்” என்று ராகுல் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
ராகுலின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் ரிம்ஸ் மருத்துவமனை முன்பாகத் திரண்டு உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ஜீவன் ரெட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
