CRIME
“மனைவியின் கண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்..” மருத்துவமனை வாசலில் இன்ஸ்டாகிராம் ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் உள்ள முன்டேவாடி மருத்துவமனைக்கு வெளியே, 32 வயதான யாசீன் தக்கீ என்ற பிரபல ரவுடி அவனது மனைவியின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயாப்புராவின் கேங் பாவாடி பகுதியைச் சேர்ந்த யாசீன், உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக முன்டேவாடி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவப் பரிசோதனை முடிந்து இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, அங்கே மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யாசீன் மீது திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மிக அருகில் இருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு யாசீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காந்தி சவுக்காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விஜயாப்புரா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தப் படுகொலைக்குக் கடந்த காலப் பகை மற்றும் சமீபத்தில் உள்ளூர் திருவிழா ஒன்றில் டிஜே சவுண்ட் சிஸ்டம் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட புதிய தகராறு ஆகியவையே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட யாசீன் தக்கீ மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவன் இன்ஸ்டாகிராமில் ரவுடித் தனத்தை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோக்களைப் பதிவிட்டுப் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் மருத்துவமனைக்கு வெளியே நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
