LATEST NEWS
“அம்மா அடிக்கடி சாகப்போறேன்னு சொல்லுவாங்க” 3 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த தாய்… 12 வயது சிறுமி சொன்ன கண்ணீர் கதை
உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை மாலை தாய் ஒருவர் தனது மூன்று மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் அந்தப் பெண்ணும், அவரது மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கணவர் ராம்தேஜ் பால் தனது மூத்த மகள் ரியாவுடன் குளிர்கால ஆடைகள் வாங்கச் சந்தைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண் கடந்த சில காலமாகப் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்ததும், மருத்துவச் செலவுகள் அதிகரித்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. குடும்பத்தின் சேமிப்பு முழுவதும் சிகிச்சைக்கே செலவாவதால், தனது நான்கு மகள்களின் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து அவர் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். தனது தாய் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி வந்ததாகவும் 12 வயது மூத்த மகள் ரியா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்திற்குள் எந்தவிதத் தகராறும் இல்லை எனத் தெரியவந்துள்ள நிலையில், ரயில்வே மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
