CRIME
“இனி குடிக்க மாட்டேன்..” மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவன்.. போதை தலைகேறியதால் நடந்த கொடூர சம்பவம்..!!
திருப்பூர் தட்டான் தோட்டம் முதல் வீதியில் வசித்து வந்த பாலசுப்ரமணியம் (45) என்பவருக்கும், அவரது மனைவி மலர் (40) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவி தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பாலசுப்ரமணியம் திருப்பூர் பூ மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் வீட்டை விட்டு வெளியேறிய மலர், பின்னர் கணவர் திருந்தி வாழ்வதாக உறுதியளித்ததை நம்பி மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், சில மாதங்களிலேயே பாலசுப்ரமணியம் மீண்டும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியதால் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. நேற்று (நவ 14) மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பாலசுப்ரமணியம் மது போதையில் இருந்ததுடன், மனைவி மலருடன் தகராறில் ஈடுபட்டதுமில்லாமல் அவரது தாயாரையும் வாக்குவாதம் செய்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, பாலசுப்ரமணியம் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மலரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததைக் கண்ட பாலசுப்ரமணியம் அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்று தலைமறைவானார்.
இதுகுறித்துத் தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு, கைரேகை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், திருப்பூர் மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி நேரில் வந்து தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் மலரின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பாலசுப்ரமணியத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட தொடர் தகராறில் மனைவியைக் கணவரே அடித்துக் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
