CRIME
ரயில் நிலையத்தில் பயங்கரம்.. மாற்றுத்திறனாளி பெட்டிக்குள் 4 நாட்களாகக் கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட் பிரேக் பழுது ஏற்பட்டதால், பராமரிப்புப் பணிகளுக்காக நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து, கோட்டயத்திற்கு ரயிலை இயக்குவதற்காக ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவில், உயிரிழந்த அந்தப் பெண்ணின் இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் இருந்ததும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய ரயில்வே போலீசார், இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நவம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 5-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு அருகே பெண் ஒருவர் நடந்து சென்றதும், பின்னர் காலை 8 மணியளவில் அந்தப் பெட்டியில் இருந்து வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நபர் ஒருவர் வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்புத் துலக்கிய போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (31) என்ற நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த ஐயப்பன், தனியாகச் சென்ற அந்தப் பெண்ணைப் பலவந்தமாக ரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததோடு, சடலத்தை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதை வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஐயப்பனைக் கைது செய்த ரயில்வே போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.
