Uncategorized
“என்னைக் காப்பாற்றுங்கள்…!” என அலறி ஓடிய இளம்பெண்… தலைமறைவாக இருந்த ஹோட்டல் ஓனர் மற்றும் மேனேஜர்… போலீஸ் விரித்த வலையில் சிக்கிய பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் பணயக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுத் தாக்கப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த ஹோட்டல் உரிமையாளர் கோவிந்த் சௌராசியா மற்றும் மேலாளர் கிருஷ்ணா ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மீரட்டின் சதர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபுலன் பகுதியில் இயங்கி வந்த ‘ஹோட்டல் ஸ்கொயர்’ விடுதியிலிருந்து, இளம்பெண் ஒருவர் “உதவி, என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வருவதும், அவரை இளைஞர் ஒருவர் துரத்திப் பிடித்து மீண்டும் உள்ளே இழுத்துச் செல்ல முயல்வதுமான சிசிடிவி காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து அந்த ஹோட்டலுக்குச் சீல் வைத்த காவல்துறையினர், முக்கியக் குற்றவாளியான சல்மான் என்பவரை முதலில் கைது செய்தனர்; அப்போது அவர் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியானது.
இந்த வழக்கு விசாரணையில் ஹோட்டல் மேலாளர் கிருஷ்ணா மற்றும் உரிமையாளர் கோவிந்த் சௌராசியா ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே இருவரையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல், பணயக்கைதியாகப் பிடித்து வைத்தல் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மேலாளர் கிருஷ்ணா மீது ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
