LATEST NEWS
“பிரிட்டன்ல இது நடந்தா இனவெறினு சொல்வாங்க…! டெல்லி ஹாட் வாசலில் நின்னு கொந்தளித்த வெளிநாட்டு பயணி… அப்போ உங்க ஊரு காலேஜ்ல பண்றதுக்கு பேரு என்னவாம்..?” ஒரே கேள்வியில தரமான ‘நோஸ் கட் கொடுத்த நெட்டிசன்கள்..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிநாட்டு விப்லாகர் ஒருவரின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அதில், டெல்லியின் புகழ்பெற்ற ‘டெல்லி ஹாட்’ நுழைவுச் சீட்டின் விலையைக் கண்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கட்டணத்தில் ஏன் வித்தியாசம் இருக்கிறது என்று கோபமடைந்த அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி, இதை நேரடியாக இனவெறி மற்றும் பாகுபாடு என்று குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, இந்த இரண்டு விதமான கட்டணக் கொள்கை உண்மையில் தவறானதா அல்லது இதன் பின்னணியில் நியாயமான காரணம் உள்ளதா என்ற விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் டைலர் பிளண்டன் என்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி ஹாட் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள கட்டணப் பலகைக்கு முன்னால் அவர் நிற்பதைக் காண முடிகிறது. அந்தப் பலகையின்படி, பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.30, 5-12 வயதுக் குழந்தைகளுக்கு ரூ.20, மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு ரூ.100 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டிய அந்த சுற்றுலாப் பயணி, “மற்றவர்களை விட நான் ஏன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்? பிரிட்டனில் இதுபோன்று நடந்தால் அது இனவெறி என்று அழைக்கப்படும், ஆனால் இங்கு இது பரவாயில்லை போலிருக்கிறது” என்று கிண்டலாகக் கூறியுள்ளார். மேலும் “இந்தியாவில் இனவெறி உள்ளதா?” என்ற வரிகளையும் வீடியோவில் சேர்த்திருந்தார்.
https://www.instagram.com/reel/DcyS1uWCSFD/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ வைரலானதும், சமூக வலைதளப் பயனர்கள் அவருக்குப் தகுந்த பதிலடி கொடுக்கத் தொடங்கினர். மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்களிடம் காட்டப்படும் இரட்டை நிலையைச் சுட்டிக்காட்டிய ஒரு பயனர், “வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிப்பது இனவெறி இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். டெல்லி ஹாட் போன்ற பொது இடங்களின் பராமரிப்புக்கு இந்தியக் குடிமக்களின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவதால், உள்ளூர் மக்களுக்குக் குறைந்த கட்டணம் நிர்ணயிப்பது முற்றிலும் நியாயமானது என்று பலர் விளக்கமளித்தனர். மேலும், இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுலாத் தலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன என்பதையும் பயனர்கள் நினைவூட்டினர்.
