LATEST NEWS
அடேங்கப்பா… அன்னைக்கு சைக்கிளில் வந்து ரூ.50 கூலிக்கு வேலை செய்த தூய்மைப் பணியாளர்… இன்று சொந்தமாக ‘ஃபார்ச்சூனர்’ காரில் வந்து தெருக்கூட்டும் நெகிழ்ச்சிச் சம்பவம்..! இணையத்தை கலக்கும் வீடியோ..!!
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பந்த்வால் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும் சேசப்பா என்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தினமும் சொகுசான வெள்ளை நிற ‘டொயோட்டா ஃபார்ச்சூனர்’ காரில் வேலைக்கு வந்து, காரில் இருந்து இறங்கி கையில் துடைப்பத்தை எடுத்து எந்தவித பந்தாவும் இன்றி வீதிகளைக் கூட்டிச் சுத்தம் செய்கிறார். 3-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர், 1996-ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.50 கூலியில் சைக்கிளில் வந்து தூய்மைப் பணியை தொடங்கினார். வீதிகளைப் பெருக்கும்போது செல்லும் கார்களைப் பார்த்துத் தானும் ஒருநாள் காரில் பயணிக்க வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொண்டார்.
இவருடைய கடந்த காலம் மிகுந்த வறுமையும் வேதனையும் நிறைந்ததாக இருந்தது. தந்தையின் மறைவின் போது இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமில்லாமல், உடலை நேத்ராவதி ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று விசர்ஜனம் செய்ய வேண்டிய துயர நிலைக்குத் தள்ளப்பட்டார். வறுமையின் விரக்தியால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு, 2005-ஆம் ஆண்டு பந்த்வால் காவல் சப்-இன்ஸ்பெக்டர் பெல்லியப்பா அளித்த அறிவுரையும் ஆதரவும் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்றிலிருந்து மதுவை முற்றிலும் துறந்து, உழைப்பை மட்டுமே தனது ஆயுதமாக மாற்றிக் கொண்டார்.
நகராட்சிப் பணி முடிந்த பிறகும் சும்மா இருக்காமல், தனியாகப் பால் வியாபாரம் செய்வது, விவசாயம் மற்றும் உள்ளாட்சி பஞ்சாயத்தின் குடிநீர் விநியோகப் பணிகள் என ஓய்வில்லாமல் உழைத்த சேஷப்பா, சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் மற்றும் வங்கிச் கடன்கள் மூலம் ஓம்னி, ஆல்ட்டோ, ஸ்கார்பியோ போன்ற கார்களைத் தாண்டி, இறுதியில் தனது கனவு காரான ‘ஃபார்ச்சூனரையும்’ சொந்தமாக வாங்கியுள்ளார். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார் வைத்திருந்தாலும், “செய்வதே தொழில், நேர்மையான எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல” என்ற எண்ணத்துடன் தினமும் அதிகாலையிலேயே பணிக்கு வந்து தெருக்களைப் பெருக்கும் இவருடைய எளிமையும், விடாமுயற்சியும் வறுமையை வென்று கனவுகளை நனவாக்க நினைக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய ஊக்கமளிப்பதாக உள்ளது.
