LATEST NEWS
உதவி தேடி வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு…காவல் நிலையத்திற்குள் நடந்த அடுத்தடுத்த அசிங்கம்…தூத்துக்குடியில் பரபரப்பு! ஒரே காவல் நிலையத்தில் அடுத்தடுத்து சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்… சிக்கிய ஆபாச ஆடியோ ஆதாரம்!
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அக்னி முத்து என்பவர், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் புகார் அளிப்பதற்காக இந்தக் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட தலைமை காவலர் அக்னி முத்து, மனுவில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணைப் பயன்படுத்தி, அவருக்குத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உதவி தேடி வந்த பெண்ணிடம் வாட்ஸ்அப் மூலமாக ஆபாசமான வார்த்தைகளில் குறுஞ்செய்திகளை அனுப்பி அவர் அத்துமீறியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவலரே இப்படி அநாகரிகமாக நடந்துகொண்ட தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இதுகுறித்து அக்னி முத்துவைத் தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அதற்கு அவர், “இதற்கு மேல் இவ்வாறு செய்ய மாட்டேன்” என்று மண்டியிடும் தொனியில் பேசியுள்ளார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவியது. இந்த விவகாரம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால், தலைமை காவலர் அக்னிமுத்துவை பணியிடை நீக்கம் (Suspension) செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மாதமும் இதே போன்ற ஒரு அவலம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு பணியாற்றிய காவல் ஆய்வாளர் திலீபன் என்பவர், சக பெண் காவலருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய புகாரில் கடந்த மாதம் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அந்தச் சுவடு மறைவதற்குள், தற்போது அதே காவல் நிலையத்தில் பெண் புகார்தாரரிடம் ஆபாசமாகப் பேசிய தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரே காவல் நிலையத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கெதிரான புகார்களில் இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
