LATEST NEWS
“யாருய்யா நீங்க… எங்கிருந்துடா வர்றீங்க..!” ECR-ல் குதிரையில் கெத்தாக உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்..!!
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலவாக்கம் பகுதியில், ஜொமாட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக கம்பீரமாக வெள்ளை நிறக் குதிரையில் ஏறி உணவு விநியோகம் செய்துள்ளார். உணவுகள் அடங்கிய பார்சல்களுடன் அவர் குதிரையில் சென்ற இந்த வினோதமான காட்சி, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கடந்து, வாடிக்கையாளர்களுக்குச் சரியான நேரத்திற்குள் உணவை விநியோகிப்பதற்காகவே இவர் இத்தகைய மாறுபட்ட முறையைக் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் செலவைக் குறைப்பதற்கும் இந்த வழிமுறை பயனுள்ளதாக அமைகிறது.
குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்த இந்த ஊழியரை மக்கள் தங்களது கைபேசிகளில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இது “சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான டெலிவரி முறை” என்றும், “டிராஃபிக் ஜாமுக்குச் சரியான தீர்வு” என்றும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.
