LATEST NEWS
“வீட்டை விட்டு துரத்திட்டாங்க சாமி!”.. மகன்களும் மனைவியும் செய்த துரோகம்… ஆட்சியரிடம் முதியவர் வைத்த பகீர் கோரிக்கை..!!
கான்பூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொது விசாரணையின் போது, 41 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு வயதான கணவர் ஒருவர் அளித்த மனு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, வீடு கட்டவும், மகன்களின் கல்வி மற்றும் திருமணத்திற்காகவும் தனது பண்ணையை விற்றதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது அவரது மனைவியே அவரைத் தகாத வார்த்தைகளால் பேசி, காலணிகளால் தாக்கி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக ஆட்சியரிடம் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி, தனது மனைவி தன்னை வீட்டிலிருந்து விரட்டிவிடுவதாகவும், கை கால்களை உடைத்துவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குடும்ப உறுப்பினர்களும் மகன்களும் சேர்ந்து தன்னைத் தாக்கி, தங்கியிருந்த குடிசையையும் இடித்துத் தள்ளியதால், தற்போது இரவில் தங்கும் காப்பகம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறியுள்ளார். மனைவியின் சந்தேகத்திற்குரிய நடத்தையாலும், குடும்பத்தினரின் துரோகத்தாலும் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அந்த முதியவர் தனது மனுவில் விவரித்துள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் இடையே உள்ள பிரச்சனையைத் தீர்க்க இரு தரப்பையும் நேரில் வரவழைத்து, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என நிர்வாகத்திடம் அவர் உணர்ச்சிப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர பிரதாப் சிங், முதியவரின் புகாரை உடனடியாக நன்னடத்தை துறைக்கு அனுப்பி வைத்து, இந்த விவகாரத்தில் விரைவான விசாரணையை நடத்தி நீதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
