CRIME
“என் பொண்டாட்டி ஆசைப்பட்டா…” வேலை பார்த்த ஷோரூமிலேயே கணவன் செய்த பகீர் மோசடி.. ஜிபிஎஸ் டிராக்கிங் செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சொகுசு காரில் வலம் வர வேண்டும் என்ற மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, தான் வேலை பார்க்கும் ஷோரூமிலிருந்தே ரூ.23 லட்சம் மதிப்புள்ள காரைத் திருடிய கணவனின் வினோதச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போபாலில் உள்ள வோக்ஸ்வாகன் கார் ஷோரூமில் கடந்த ஒரு வருடமாக கஜேந்திரா என்கிற ரிஷி ஆனந்த் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். விலை உயர்ந்த சொகுசு காரில் பயணம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி அடிக்கடி ஆசைப்பட்டதால், வாடிக்கையாளர் ஒருவரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘விர்டஸ் ஜிடி’ ரக காரை செப்டம்பர் 28ஆம் தேதியன்று கஜேந்திரா திருடிச் சென்றுள்ளார். ஷோரூமில் வழக்கமான இருப்புச் சரிபார்ப்பு நடக்கும் வரை இந்த கார் திருடுபோன விஷயம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
தணிக்கையின் போது ரூ.23 லட்சம் மதிப்புள்ள கார் காணாமல் போனதை அறிந்த ஊழியர்கள், உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர். காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் காரின் இருப்பிடத்தைக் கண்காணித்த போது, அது நர்மதாபுரம் சாலையில் உள்ள ஆஷிமா மால் அருகே இருப்பது கண்டறியப்பட்டது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, திருடப்பட்ட அந்த சொகுசு காரை கஜேந்திராவின் மனைவி ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து காரை மீட்ட போலீசார், அவரது மனைவியைக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இத்திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள கணவர் கஜேந்திராவை போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
