LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் சம்பவம்: “என் பிள்ளைகளை வெட்டாதீங்க” – கள்ளக்குறிச்சியில் மரங்களை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்மணி..!!
உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்காகத் தான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரங்களைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (58) என்ற அந்தப் பெண்மணி, தனது விவசாய நிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுத் தனது குழந்தையைப் போல் வளர்த்துப் பராமரித்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும், அண்மையில் மின்கோபுரம் அமைக்கப்பட்டு மின் கம்பிகளும் பொருத்தப்பட்டன. இதற்காக மரங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.97 ஆயிரம் வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் வந்த மின்வாரிய ஊழியர்கள் நிலத்தில் இருந்த 89 மரங்களை வெட்டி அகற்றினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வி, “வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள்” என்று கூறி மரங்களைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்த வேளையில், செல்வி ஏற்கனவே அரசுப் பள்ளி கட்டுவதற்காகத் தனது 10 சென்ட் நிலத்தை அரசாங்கத்திற்குத் தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
