Uncategorized
“இட்லி மாவு இருக்கா டீச்சர்?” கஸ்டமர் போல் வீட்டுக்குள் நுழைந்து அரங்கேறிய கொடூரம்… 55 வயது பெண் கொலையில் குற்றவாளி சொன்ன பகீர் வாக்குமூலம்..!!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த வனஜா (55) என்ற பெண் வீட்டில் தனியாக இருந்தபோது ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மளிகைக் கடை நடத்தி வரும் இவரது கணவர் ராதாகிருஷ்ணன் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் அதிரடி விசாரணையில், இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், வனஜா வீட்டிலேயே தயாரித்து விற்கும் “இட்லி மாவு இருக்கா?” என்று வாடிக்கையாளர் போலக் கேட்டு வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனஜாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தாலிச்சரடு, தங்க வளையல்கள் உள்ளிட்ட 12½ சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அம்பலமானது. சிசிடிவி-யில் பதிவான வாகன எண்ணை வைத்து, குளத்துமேடு பகுதியில் சுற்றித்திரிந்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த யுகேந்தர் என்ற அப்துல் ரகுமான் (தற்காலிக அரசு பேருந்து ஓட்டுநர்) என்பவரைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அப்துல் ரகுமான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் புதிதாக வீடு கட்டி வருவதால் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இதனால் வனஜாவின் வீட்டைப் பல நாட்களாகக் கண்காணித்து, அவர் தனியாக இருக்கும் நேரத்தை அறிந்து திட்டமிட்டே இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியதாக ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12½ சவரன் நகைகளைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைக் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
