LATEST NEWS
“இரக்கமற்ற, கீழ்த்தரமான அரசியல்” பாட்டி இறந்த செய்தி வந்தும் தலைவரை விடாத டெல்லி போலீஸ்.. சி.ஜே.பி கடும் கொந்தளிப்பு.!!
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற இருந்த போராட்டத்திற்காக வந்தடைந்த சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிலாஷ் தீப்கே , டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் காவலில் இருக்கும்போதே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரது பாட்டி சாவித்ரிபாய் காலமானார் என்ற சோகமான செய்தி வெளிவந்தது.
இந்தச் சூழலில், “இரக்கமற்ற மற்றும் கீழ்த்தரமான அரசியல்” என்று டெல்லி காவல்துறையின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ள சி.ஜே.பி இயக்கம், தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அபிலாஷ் தீப்கேவை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தில் சோகம் நேர்ந்துள்ள இந்த நேரத்திலும், அடிப்படை மனிதநேயத்தைக் காட்டாமல் அவரைத் தடுத்து வைத்திருப்பதை ஏற்க முடியாது என அக் கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.
இதனிடையே, பாட்டியின் மறைவு குறித்த தகவல் காவல்துறை மூலம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டு, மனிதநேய அடிப்படையில் அவர் தனது சொந்த ஊருக்குச் செல்லத் தேவையான பயண ஏற்பாடுகளுக்கு உதவ முன்வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட வந்த தலைவரைத் தடுத்து வைத்து குடும்பச் சோகத்தின்போதும் அலைக்கழிப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சி.ஜே.பி ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
