LATEST NEWS
“சபாநாயகரை உடனே தூக்குங்க” நமக்கே ஆப்பு வைக்குறாரு… அதிருப்தியில் அமைச்சர்கள்..? த.வெ.க. உள்வட்டாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவதால், அவை நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமாகவும் காரசார விவாதங்களுடனும் நடந்து வருகின்றன. இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையைத் திறம்பட நடத்தி வருகிறார் என்று ஒரு தரப்பினர் பாராட்டி வந்தாலும், அவரது நடுநிலையான மற்றும் கண்டிப்பான அணுகுமுறை ஆளுங்கட்சியான த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) உறுப்பினர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பதவியேற்ற நாள் முதலே மிகக் கவனமாகச் செயல்பட்டு வரும் சபாநாயகர், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி பேரவையை அமைதியான முறையில் வழிநடத்த முயற்சித்துப் வருகிறார். தேவைப்படும் நேரங்களில் சில அதிரடி முடிவுகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமைச்சர்களின் உரைகளில் குறுக்கிட்டுக் கட்டுப்பாடுகளை விதிப்பது, நீண்டநேரப் பேச்சைக் குறைப்பது மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவை பதிவிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் ஆளுங்கட்சியினருக்குச் சிறு சங்கடத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போது, முந்தைய திமுக ஆட்சிக் கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி த.வெ.க. அமைச்சர்கள் பேச முயலும் போது, சபாநாயகர் அதைத் தடுத்து சுருக்கமாகப் பேசுமாறு அறிவுறுத்துகிறார். இதனால் அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்றோர் அதிருப்தியில் இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளை முழுமையாக எதிர்கொண்டு விமர்சிக்க முடியவில்லையே என்று வருந்துவதாகவும் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை மாற்ற வேண்டும் என்ற கருத்துகள் த.வெ.க. உள்வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்படத் தொடங்கியுள்ளன. அதேவேளையில், அனுபவம் குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அவையைக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்த சபாநாயகரின் இந்த கண்டிப்பான அணுகுமுறை மிகவும் அவசியம் என்றும், பேரவையை நடுநிலையுடன் நடத்துவது அரசாங்கத்தின் நற்பெயருக்கே உதவும் என்றும் மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
