LATEST NEWS
“5 வருஷத்துக்கும் எங்க சப்போர்ட் உண்டு” நாங்களும் இப்போ ஆளுங்கட்சி தான்… விஜய்யை நேரில் சந்தித்து திருமாவளவன் கொடுத்த மாஸ் வாக்குறுதி..!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அளித்த பேட்டி அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாநில சுயாட்சி மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தி இந்தச் சந்திப்பு அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், தவெக அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சிக்கும் தங்களது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார். மேலும், விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் நகல்களை விஜய்யிடம் வழங்கி, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூகத்தில் நடக்கும் வன்முறைகள் பற்றிப் பேசிய திருமாவளவன், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆட்சியையோ அல்லது கட்சியையோ மட்டும் முழுமையாகக் குற்றம் சாட்டிவிட முடியாது என்றும், இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், தலித் மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதிலும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய அவர், தவெக தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் விசிகவும் ஓர் ஆளுங்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். தவெகவுடன் இணைந்து செயல்படுவதை விசிக மாநாட்டிலேயே உறுதிசெய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் தங்களது கட்சியின் வீரியமும் கொள்கைக் குரலும் எந்தச் சூழலிலும் நீர்த்துப்போகாமல் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
