LATEST NEWS
அடக்கடவுளே..! “லேசர் சுன்னத் செய்வதாகக் கூறி மோசடி.. மருத்துவரின் அலட்சியத்தால் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! கொந்தளிக்கும் பெற்றோர்..!!”
பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 12 வயது சிறுவனுக்கு லேசர் முறையில் சுன்னத் சிகிச்சை செய்வதாகக் கூறி, சாதாரண அறுவை சிகிச்சை செய்து ஏமாற்றியதாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிக்கமகளூரைச் சேர்ந்த தப்ரேஸ் கான் என்பவரின் 12 வயது மகனுக்கு சிறுவயதிலிருந்தே இதய நோய் பாதிப்பு இருந்தது. 3 மாத குழந்தையாக இருக்கும்போதே அந்தச் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிக வலி இல்லாத சிகிச்சைக்காக, இன்ஸ்டாகிராமில் பார்த்த விளம்பரத்தின் மூலம் பெங்களூரு ஃபிரேசர் டவுனில் உள்ள ‘நியூ ஹோப் செக்சாலஜிஸ்ட் அண்ட் இன்ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனை’யைச் சேர்ந்த மருத்துவர் ரியாஸை குடும்பத்தினர் அணுகியுள்ளனர்.
சிறுவனுக்குக் குறைந்த வலியுடன் லேசர் முறையில் சுன்னத் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர் ரியாஸ் உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அக். 10 ஆம் தேதி குழந்தையை அழைத்துக்கொண்டு பெங்களூரு வந்த குடும்பத்தினரிடமிருந்து சிகிச்சைக்காக ரூ.19,000 கட்டணமாகப் பெறப்பட்டது. இருப்பினும், லேசர் சிகிச்சைக்குப் பதிலாக மருத்துவர் சாதாரண அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனுக்குக் கடுமையான வலி ஏற்பட்டு, அவனது உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே இதய நோய் உள்ள குழந்தை என்பதால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவனின் நிலைமை மோசமடைந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள பௌரிங் மருத்துவமனைக்குச் சிறுவனை அவசர அவசரமாக அழைத்துச் சென்று சேர்த்தனர். லேசர் சிகிச்சை செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிய மருத்துவர் ரியாஸ் மீது சிறுவனின் தந்தை தப்ரேஸ் கான் புலகேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அறுவை சிகிச்சையின் போது உண்மையில் என்ன நடந்தது, மருத்துவ அலட்சியம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
