CRIME
“அவள் புதைக்கப்பட்டது மண்ணிலல்ல, மர்மங்களோடு”… பீகாரில் மகளின் கொலையை மறைக்க சடலத்திற்கு மேல் மாம்பழச் செடியை நட்ட தாய்… பெரும் பயங்கரம்..!!
பீகார் மாநிலம் முசாப்பர்பூர் மாவட்டத்தில், 19 வயது இளம் பெண் ஒருவரின் சடலத்தின் எஞ்சிய பாகங்கள் மாந்தோப்பில் புதைக்கப்பட்டு, அதன் மேல் மாம்பழக் கன்று நடப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் என்றும், சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக அவரைக் காணவில்லை என்றும் கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில், தகவலறிந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
காவல்துறையினர் உடலைக் கைப்பற்ற துமரி கிராமத்திலுள்ள மாந்தோப்பிற்குச் சென்றபோது, அங்கே மழை மற்றும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. உடனே பம்ப் செட் மூலம் தண்ணீரை வெளியேற்றி, சுமார் 8 முதல் 10 மணி நேர தீவிர அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு புதைக்கப்பட்டிருந்த சடலத்தின் எச்சங்களைத் தோண்டி எடுத்தனர். தடயவியல் (FSL) குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, உடற்கூறாய்வு மற்றும் ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பெண்ணின் தாய், சகோதரி மற்றும் இரு இளைஞர்களைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் மகள் தற்கொலை செய்து கொண்டதாகத் தாய் தரப்பில் கூறப்பட்டாலும், இது ‘ஆணவக் கொலை’ அல்லது சட்டவிரோத உறவை மறைக்க நடந்த கொலையா என்ற கோணங்களிலும் காவல்துறையினர் முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
