LATEST NEWS
திக் திக் விபத்து..! காட்டுத் தீயை அணைக்கச் சென்ற இடத்தில் நடுவானில் மோதிக்கொண்ட தீயணைப்பு ஹெலிகாப்டர்கள்… வெளியான பதைபதைக்கும் வீடியோ..!!
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள போர்ட்டோ ஜெர்மெனோ பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இந்த ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் நடுவானில் மோதிக்கொண்டதில், ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
கிரீஸ் நாட்டுத் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, விபத்துக்குள்ளான ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா இரண்டு விமானப்படை வீரர்கள் என மொத்தம் 4 பேர் இருந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புக்குழுவினர் உடனடியாகத் தங்களது தீவிரத் தேடுதல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், ஹெலிகாப்டரில் இருந்த அந்த 4 வீரர்களின் தற்போதைய நிலை மற்றும் உயிர்ச்சேதம் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காட்டுத்தீ பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாகப் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாகச் சுமார் 3.5 லட்சம் மக்கள் தங்களது வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு போன்ற வானிலை காரணங்களால் தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விபத்துகளுக்குப் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட நாசவேலைகள் அல்லது மனிதத் தவறுகள் உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்
