CRIME
“நீ முதல்ல குடி… நான் அப்புறம் குடிக்கிறேன்..” காதலனை விஷம் குடிக்க வைத்து வீடியோ எடுத்த காதலி..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ரவீந்திர சிங் என்பவரை, ராம்பூரைச் சேர்ந்த குர்பிரீத் கவுர் என்ற பெண் காதலிப்பதாகக் கூறித் தன் வலையில் வீழ்த்தியுள்ளார். காதலிக்கும் காலத்தில் ரவீந்திரனின் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி அவரை மிரட்டி சுமார் 25 லட்ச ரூபாயை குர்பிரீத் பறித்ததாகக் கூறப்படுகிறது. ரவீந்திர சிங் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவரைப் பொய்யான வழக்கில் சிக்க வைத்து விடுவதாகப் பயமுறுத்தியதுடன், காதலைக் காரணம் காட்டித் தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டியுள்ளனர்.
இதையடுத்து, இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வது என திட்டமிட்டுள்ளனர். அதன்படி, குர்பிரீத்தின் தூண்டுதலால் ரவீந்திர சிங் விஷம் குடித்தார். ஆனால், திட்டம் போட்ட குர்பிரீத் விஷத்தைக் குடிக்காமல் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டார். விஷம் அருந்திய ரவீந்திர சிங்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவீந்திர சிங் விஷம் குடித்த பிறகு, அதை வீடியோவாகப் பதிவு செய்து குர்பிரீத் இணையத்தில் வைரலாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்த வீடியோவைப் பார்த்த ரவீந்திரனின் குடும்பத்தினர் சுங்கச்சாவடி பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. மேலும், ரவீந்திரனின் தந்தை குர்மேல் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், காதலி குர்பிரீத் கவுர், அவரது தாய் பிந்தர் கவுர் மற்றும் அண்ணி சதேந்தர் கவுர் ஆகிய 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து பரேலி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
