CINEMA
உலக அளவில் வென்ற ராயபுரம் பெண்…”ஐம் சாரி ஐயப்பா” சர்ச்சைக்குப் பின் இசைவாணி எடுத்த அதிரடி முடிவு…இன்ஸ்டாகிராமில் காதலரை அறிமுகம் செய்து இசைவாணி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு…!
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கானா இசைத்துறையில், பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கானா பாடகி இசைவாணி. எளிய மக்களின் வாழ்வியலையும், சமூக அக்கறையுள்ள கருத்துகளையும் தனது கணீரென்ற குரலில் பாடி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். இயக்குநர் பா. ரஞ்சித் உருவாக்கிய இசைக்குழுவில் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகள் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இவர், பிபிசி (BBC) வெளியிட்ட உலகின் 100 செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலிலும் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராகப் பங்கேற்று, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். கலைத்துறையில் தனக்கான பாதையை வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட இசைவாணி, சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். குறிப்பாக, அவர் பாடிய “ஐம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா தப்பா” என்ற பாடல், இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்துவதாகக் கூறி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. சில இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இசைவாணி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கியூட்டான புகைப்படத்தைப் பகிர்ந்து, தனது காதலரை ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இணையத்தில் செம வைரலாகி வரும் இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர், தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், “வாழ்த்துகள் இசைவாணி, எப்போது திருமணம்?” என்ற கேள்விகளையும் கமெண்ட் பகுதியில் எழுப்பி, இந்த ஜோடியைக் கொண்டாடி வருகின்றனர்.
