LATEST NEWS
“ரூ.600 கோடி சொத்தைக் காட்டியவருக்கு ரூ.30 கோடி ஒரு மேட்டரா..?” முதல்வர் விஜய் வழக்கில் நீதிபதி சாட்டையடி கேள்வி.. அதிர்ந்துபோன நீதிமன்றம்..!!
சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கின் விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த மே 2026 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வேட்புமனுவில், சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக வாக்காளர் எஸ். தினேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்தத் தேர்தல் வழக்கினை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், ஏற்கனவே சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை முறையாகக் காட்டியுள்ள நிலையில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விடுபட்டது எவ்வாறு தேர்தல் ஊழல் அல்லது முறைகேடான செயலாக மாறும் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், சூப்பர் ஸ்டாராகவும் பிரபல நடிகராகவும் இருந்த ஒருவருக்குப் பல்வேறு இடங்களில் சொத்துகள் இருப்பது இயல்பானது என்றும், வேட்புமனுவில் உள்ள சொத்துப் பட்டியலை அவரே நேரில் தயாரித்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டார். ஒரு கோடீஸ்வரரிடம் சொத்துகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று கேட்டால் அவருக்கு எப்படித் தெரியும் என்றும், ஆடிட்டர் செய்த தவறுகளுக்காக முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரு முதலமைச்சரின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஏற்கனவே விஜய் தரப்பில் இந்தச் சொத்து மறைப்புக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று வாதிடப்பட்ட நிலையில், விஜய்க்கு வாக்களிக்க முடிவெடுத்த ஒரு வாக்காளருக்கு இந்த ₹30 கோடி விடுபடல் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
