LATEST NEWS
திருமாவளவன் தான் அடுத்த முதலமைச்சரா..? வைரலாகும் ‘TN CM 2031’ கார் விவகாரம்… அமைச்சர் வன்னி அரசு சொன்ன பகீர் விளக்கம்..!!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே உள்ள கொடுக்கூர் ஆதிதிராவிட நலப்பள்ளியில் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக இடைத்தேர்தலில் தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர் நீக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டதற்கு, கூட்டணி நட்சத்திர பேச்சாளர்கள் என திருத்தம் செய்து வெளியிடுவார்கள் என்றும், நீக்கினாலும் நீக்காவிட்டாலும் அவர்கள் நட்சத்திர பேச்சாளர்கள்தான் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து கேட்டதற்கு, ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருப்பதாகவும், அவதூறு பரப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்ற நோக்கத்திலேயே அவர் கூறியிருப்பார் என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும், விசிக தலைவர் திருமாவளவன் பயணித்த ”TN CM 2031” காரின் நம்பர் ப்ளேட் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, சமூக நீதி விழா நடத்திய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காரில்தான் திருமாவளவன் பயணம் செய்ததாகவும், அதை அரசியலுக்காக பேசுவதை ஏற்க முடியாது என்றும் கூறினார். திருமாவளவனை முதல்வராக்குவதுதான் தங்களது கனவு என்றும், அதை நோக்கி ஒரு குறியீடாக இது சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்த அவர், இதை உள்நோக்கத்துடன் விவாத பொருளாக மாற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், விவசாய கடன் தள்ளுபடி உட்பட அனைத்து கோரிக்கைகளையும் முதல்வர் விஜய் தீர்த்து வைப்பார் என்றும், இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் கூறியதை தான் வழிமொழிவதாகவும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
