CRIME
“உங்க குழந்தைக்கு கிட்னி ஃபெயிலியர்…” பண ஆசைக்காக குழந்தையின் உயிருடன் விளையாடிய பிரபல தனியார் மருத்துவமனை.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தவறான மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் டயாலிசிஸ் செய்யப் பரிந்துரைத்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது சூரஜ்பூர் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தாத்ரியைச் சேர்ந்த சச்சின் பிதுரி என்பவர், தனது மகன் சாத்விக்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, கடந்த செப்டம்பர் 20, 2025 அன்று டெல்டா ஒன் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனை அறிக்கையில் யூரியா மற்றும் சோடியம் அளவுகள் அதிகமாக இருப்பதாகக் காட்டி, குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகக் கூறி அவசர அவசரமாக டயாலிசிஸ் செய்யுமாறு மருத்துவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, இரத்த அளவுகள் அனைத்தும் இயல்பாக இருப்பதும், குழந்தைக்கு சாதாரண டைபாய்டு காய்ச்சல் மட்டுமே இருப்பதும் தெரியவந்தது.
மருத்துவமனையின் இந்த ஆபத்தான அலட்சியப் போக்கு குறித்துக் குழந்தையின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது சூரஜ்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான மருத்துவ அறிக்கையின் மூலம் ஒரு குழந்தையின் உயிருடன் விளையாடி, தேவையற்ற சிகிச்சைக்கு வற்புறுத்திய இந்தச் சம்பவம் கிரேட்டர் நொய்டா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
