LATEST NEWS
ஜோசப் விஜய்னு சொல்றது ஏன்..? சரணடைவதை விட சாவதே மேல்… விஜய்யை வெளுத்து வாங்கிய சீமான்… மேடையில் வெடித்த புதிய சர்ச்சை..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரள்நிதியைப் பயன்படுத்தி சொகுசு கார் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குத் தனது வழக்கமான ஆவேசப் பாணியில் பதிலளித்தார். “மக்களிடம் நிதி கேட்பதில் என்ன தவறு? தேர்தலில் வாக்கு கேட்பது மட்டும் தவறில்லையா?” எனக் கேள்வியெழுப்பிய அவர், தன் மீதான விமர்சனங்களை மேடையில் மிகவும் கடுமையான வார்த்தைகளால் எதிர்கொண்டது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் மொழியே தமிழனின் முகவரி மற்றும் அரசியல் என்று வலியுறுத்திய சீமான், நடிகர்களுக்கும் உண்மையான தலைவர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றார். மாவீரர்களின் கனவைச் சுமந்து நிற்கும் தமிழினக் கோட்பாடு அடிமைப்பட்டு வாழ்வதை விடப் போராடிச் சாவதையே முதன்மையாகக் கொண்டது எனக் குறிப்பிட்ட அவர், சாதி பாகுபாடின்றி எளிய ஆதி தமிழ் மக்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பெருமை நாம் தமிழர் கட்சியையே சாரும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் புதிதாகக் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரடியாகச் சாடிய சீமான், அவரது அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் மதமும் சாதியும் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். முதலமைச்சரானதும் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், திராவிடக் கட்சிகளைப் போலவே விஜய்யும் விளம்பர அரசியலையே முன்னெடுக்கிறார் என்றும், தவெக-வின் அரசியல் மக்களுக்கான ‘ரூல்ஸ்’ அல்ல, அது வெறும் ‘ரீல்ஸ்’ அரசியல் என்றும் விமர்சித்தார்.
சாக்ரடீஸின் “வாதத்தில் தோற்பவனே அவதூறைக் கையில் எடுப்பான்” என்ற பொன்மொழியை மேற்கோள் காட்டி, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் எதிரிகளின் அவதூறுகளே என சீமான் மறுத்துள்ளார். எனினும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொதுமேடைகளிலும் அவர் தொடர்ந்து பயன்படுத்தி வரும் கடுமையான சொற்பிரயோகங்கள் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ஒரு முக்கிய அரசியல் தலைவராகப் பொதுவெளியில் பேசும்போது நிதானத்தையும் நாகரிகத்தையும் பேண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
