LATEST NEWS
என்னப்பா சொல்றீங்க..? 5.5 மீட்டர் பட்டுச்சேலை ஒரு தீப்பெட்டிக்குள்ள அடங்கிடுச்சா..?! தெலங்கானா நெசவாளர் செய்த அசாத்திய சாதனை..!!
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த வெல்டி ஹரிபிரசாத் என்ற நெசவாளர், ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் 5.5 மீட்டர் நீளமுள்ள பட்டுப் புடவையை நெய்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனைக்காக அவர் 5.5 மீட்டர் நீளமும் 45 அங்குல அகலமும் கொண்ட பட்டுப் புடவையை பாரம்பரிய கைத்தறியில் மிக நுணுக்கமாக உருவாக்கியுள்ளார்.
பொதுவாக ஒரு பட்டுப் புடவையை நெய்வதற்கு 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் நிலையில், ஹரிபிரசாத் எந்தவித இடைவெளியும் இன்றி முழு கவனத்துடன் முயன்று, வெறும் 2 மணி நேரம் 50 நிமிடங்களில் இந்தச் சேலையை முழுமையாக நெய்து முடித்துள்ளார். இத்தகைய அபாரமான வேகத்தையும் நுட்பமான திறமையையும் அடைவதற்காக அவர் சுமார் ஒரு ஆண்டு காலம் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்த நெசவு முயற்சியைக் காண ஏராளமான உள்ளூர் மக்களும் சக நெசவாளர்களும் நேரில் வந்து பார்த்து அவரைப் பாராட்டி வாழ்த்தினர். இந்திய கைத்தறி பாரம்பரியத்தையும் ராஜன்னா சிரிசில்லா பகுதி நெசவாளர்களின் அபாரமான திறமையையும் உலகிற்கு பறைசாற்றுவதே இதன் முக்கிய நோக்கம் என்றும், இச்சாதனை கைத்தறித் துறைக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதுடன் இளைஞர்களிடையே கைத்தறி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்றும் ஹரிபிரசாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
