LATEST NEWS
மருத்துவ உலகிற்கு புதிய சவால்.. மாடுகளுக்கு வந்த வைரஸ் மனிதனை பலி வாங்கிய கொடூரம்.. WHO-வையே அலறவிட்ட அதிர்ச்சி பின்னணி..!!!
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த ‘ஷாமொண்டா வைரஸ்’ தற்போது முதன்முறையாக மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் கடுமையான நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் உயிரிழந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனைகளில், இந்த ஷாமொண்டா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உலக அளவில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 1960-களின் மத்தியில் நைஜீரியா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த ஷாமொண்டா வைரஸ், வழக்கமாக சிறிய வகை பூச்சிகள் மூலம் கால்நடைகளுக்கு மட்டுமே பரவக்கூடிய ஒரு நோயாகும். குறிப்பாக மாடுகள், ஆடுகள் மற்றும் குதிரைகளை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த வைரஸ், இந்த ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியது. பிரான்சின் கிழக்குப் பகுதியில் கால்நடைகளிடையே தீவிரமாகப் பரவியிருந்த இந்த வைரஸ், அங்கு பாதிக்கப்பட்ட பூச்சிகள் கடித்ததன் காரணமாகவே, உயிரிழந்த அந்த நோயாளியையும் தாக்கியிருக்கலாம் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறையினர் கருதுகின்றனர்.
இதுவரை கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த வைரஸ், மனிதரைத் தாக்குவது இதுவே முதல் முறை என்றாலும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பிரான்ஸ் நாட்டின் சுகாதார மற்றும் விவசாய அமைச்சகங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன. இது ஒரு தனிப்பட்ட மற்றும் மிக அபூர்வமான நிகழ்வு மட்டுமே என்றும், சாதாரண பொதுமக்களுக்கு இதனால் எந்தவிதமான பெரிய சுகாதார அச்சுறுத்தலும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த அரிய சம்பவம் குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மையம் ஆகியவற்றுடன் இணைந்து தீவிர மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
