CRIME
“இது என்ன கொடுமை.. ரூ.300-க்கு விற்ற இருமுடிப் பை” உள்ளே பார்த்தபக்தர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. தமிழக அரசை அலறவிட்ட விவகாரம்..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (35) என்பவர், தனது நண்பர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் நேற்று முன்தினம் பம்பையில் கேரள அரசின் தேவசம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பக்தர்கள் வாங்கியுள்ளனர். அப்போது, அந்தப் பைகள் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பைகளில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் ‘பொங்கல் 2025’ என்றும், வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண் மற்றும் முகமை-தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் என்றும் அச்சிடப்பட்டிருந்தது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அங்கு ஒரு இருமுடிப் பை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்குப் பொங்கல் பண்டிகையையொட்டி இலவசமாக வழங்கிய வேட்டிகள், அண்டை மாநிலமான கேரளாவின் அரசு கடைக்கு எவ்வாறு விற்பனைக்கு வந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலவசமாக வழங்கப்பட்ட இந்த வேட்டிகள் ஏதேனும் இடைத்தரகர்கள் மூலம் மொத்தமாகத் திருட்டுத்தனமாக விற்கப்பட்டதா அல்லது இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன. புண்ணிய ஸ்தலமான சபரிமலையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
