LATEST NEWS
“கொலை செய்யவே வந்தான்..!” செய்தியாளர் சந்திப்பில் பாய்ந்த காலணி… பையில் இருந்தது கத்தி.. எம்.பி. பப்பு யாதவ் மீது நடந்த கொடூரத் தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக் கூறி அவர் மீதும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பப்பு யாதவ் மீது உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாகரைச் சேர்ந்த சுமித் என்ற நபர் திடீரெனக் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே இருந்தவர்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடமிருந்து கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தன்மீது தாக்குதல் நடத்திய நபர் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லவே திட்டமிட்டு வந்ததாகப் பப்பு யாதவும் அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். பப்பு யாதவுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், டெல்லி காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் காங்கிரஸ் தலைவர் பவன் கேராவும் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய கோடிக்கணக்கிலான நன்கொடை பணம் மற்றும் தங்கம் சுருட்டப்பட்டதாக எழுந்த புகாரில், கோவில் ஊழியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு ரூ.77 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேடுகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்த ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
