LATEST NEWS
ஜோடியா வந்தா ஃப்ரீ எண்ட்ரி…”நாங்கதான் கல் எறிந்தோம்னு நினைச்சு…” – விபத்து அல்ல திட்டமிட்ட கொலை! பைக் ஓட்டிய வாலிபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில், யான்சி (18) என்ற இளம்பெண் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடன் சென்ற அர்ஷத் என்ற வாலிபர் உள்ளே நடந்த கொடூரம் குறித்து வீடியோ ஒன்றின் மூலம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். ஜோடியாகச் சென்றால் நுழைவுக் கட்டணம் இல்லை என்பதால், ஆன்லைன் மூலம் பைக் புக் செய்து வந்த யான்சி மற்றும் அவரது 17 வயது தோழியைத் தங்களோடு பாருக்குள் அழைத்துச் சென்றதாக அர்ஷத் தெரிவித்துள்ளார். அங்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது சில இளைஞர்கள் அந்தப் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதைத் தட்டிக்கேட்ட தம்மையும் அவர்கள் தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட பெரும் சலசலப்பை அடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாருக்கு வெளியே வந்த பிறகு, மதுபோதையில் இருந்த இரண்டு பெண்களையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேராகப் பயணித்ததாக அர்ஷத் குறிப்பிட்டுள்ளார். அப்போது, பாருக்குள் தகராறு செய்த நபர்கள் சென்ற கார் மீது யாரோ சிலர் கல்லை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். ஆனால், தாங்கள் தான் கல் எறிந்தோம் என்று தவறாகப் புரிந்துகொண்ட அந்த ஏழு பேர் கொண்ட கும்பல், தங்களது காரைக் கொண்டு தங்களது இருசக்கர வாகனத்தின் மீது வேண்டுமென்றே இருமுறை வேகமாக மோதியுள்ளனர். இரண்டாவது முறை பலமாக மோதியதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டதாகவும், இதில் யான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்றும், அவரது 17 வயது தோழி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அர்ஷத் அந்த வீடியோவில் வேதனையுடன் விவரித்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாலகுரு, கல்லூரி மாணவர் கிஷோர் குமார், சுமன், ஜோஸ்வா உள்ளிட்ட 7 பேரைக் கோயம்பேடு போலீசார் அதிரடியாகக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, 18 மற்றும் 17 வயதுடைய இளம் பெண்களைப் பாருக்குள் அனுமதித்தது எப்படி என்று போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் தங்களது வயதை அதிகமாக்கிக் காட்டி உள்ளே சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விதிகளை மீறிய அந்த மதுபான பாருக்குப் போலீசார் ‘சீல்’ வைத்துள்ளனர். மதுபோதையில் ஏற்பட்ட ஆத்திரத்தால் ஒரு பெண்ணின் உயிர் பறிபோனதோடு, 7 வாலிபர்களின் வாழ்க்கையும் ஒரே நாளில் கேள்விக்குறியாகியுள்ளது இச்சம்பவத்தில் குறிப்பிடத்தக்கது.
