அடக்கொடுமையே…! நள்ளிரவில் பாம்பு கடித்து 3 மாணவிகள் பரிதாப பலி..! மகாராஷ்டிர பள்ளிக்கூடத்தில் நடந்த பதறவைக்கும் துயரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே…! நள்ளிரவில் பாம்பு கடித்து 3 மாணவிகள் பரிதாப பலி..! மகாராஷ்டிர பள்ளிக்கூடத்தில் நடந்த பதறவைக்கும் துயரம்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனோரா தாலுகாவில் ‘ஜப்டலாய்’ என்ற இடத்தில் அரசு உதவி பெறும் குடியிருப்புப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். வழக்கம் போல் சனிக்கிழமை இரவு மாணவிகள் தங்களது அறையில் தரைப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென உள்ளே புகுந்த நச்சுப்பாம்பு ஒன்று, தரையில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளைக் கடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் மற்ற மாணவிகளும் பள்ளி நிர்வாகத்தினரும் பார்த்தபோது, அந்த மூன்று மாணவிகளும் மூச்சின்றி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவிகளின் உடல்கள் உடனடியாக கட்சிரோலி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் காவல்துறையினரும் நிர்வாக அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அசோக் உய்கே இச்சம்பவம் குறித்து உடனடி கவனம் செலுத்தி, திட்ட அதிகாரிகளை உடனடியாக நேரில் சென்று சூழ்நிலையைக் கண்டறிய உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

அதேவேளையில், இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரமப் பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு வசதிகள் குறித்து பல்வேறு தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. பள்ளியில் முதலுதவி வசதியோ அல்லது பாம்புக்கடிக்கான மருந்தோ இருந்ததா, பாம்பு கடித்தது அங்கிருந்த பொறுப்பாளர் அல்லது ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஏன் தெரியவரவில்லை, மாணவிகளை உடனடியாக மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்வதில் ஏதேனும் அலட்சியம் காட்டப்பட்டதா என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தால் பள்ளியில் தங்கிப் படிக்கும் பிற மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இடையே கடும் அச்சமும் பீதியும் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in