Uncategorized
“மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா..?” – தவெக அரசின் மின்சார ஒப்பந்தத்தை விளாசிய டி.டி.வி. தினகரன்..!!
“ரூ.35க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க தவெக அரசு போட்டுள்ள ஒப்பந்தம், ‘மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்ற பழமொழியை நினைவூட்டுகிறது” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு அரசு மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு தனது இயலாமையை மறைக்கப் பார்க்கக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள டி.டி.வி. தினகரன், மாநிலத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டைப் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக, தற்காலிக ஒப்பந்தங்களை நாடாமல் தேவையான மின்சாரத்தை அரசே நேரடியாக உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய மின்துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் தொடர் விமர்சனங்களின் ஒரு பகுதியாக தினகரனின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
