LATEST NEWS
தேர்வில் ChatGPT மூலம் காப்பி..பேராசிரியரை அலறவிட்ட 15 நிமிட CCTV வீடியோ… ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கில் பரபரப்பு வீடியோ வெளியீடு…!!
ஐஐடி பாம்பே பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் சாகில் ரவீந்திர வாகோடேவின் சந்தேகத்திற்குரிய தற்கொலை வழக்கில், தற்போது ஒரு முக்கியத் திருப்பமாக 15 நிமிட சிசிடிவி காட்சியொன்று வெளியாகியுள்ளது. ஏசிபி தர்மவீர் பன்சோட் தலைமையிலான மும்பை குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கை பவய் காவல் நிலையத்திலிருந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இந்த சிசிடிவி காட்சிகளை முதன்மை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியானது மதியம் 12:30 முதல் 12:45 மணி வரை தேர்வு அறையில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறது. அதில், சாகில் தேர்வு எழுதும் போது தனது பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை குனிந்து பார்ப்பதும், தேர்வுக்கான விடைகளைக் கண்டறிய ChatGPT AI தளத்தைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்த தேர்வு கண்காணிப்பாளர் பேராசிரியர் சூர்யநாராயண் டூலா, சாகிலை தனியாக அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு, அவரை தேர்வு அறையிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
அதன் பின்னர், மதியம் 1:25 மணியளவில் சாகில் தனது விடுதி அறைக்குள் நுழைந்ததும், அதன் பிறகு அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதும் விடுதி சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்துப் பார்த்தபோது சாகில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது அறையில் இருந்து இதுவரை தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அவரது மொபைல் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, சாகிலின் தந்தை ரவீந்திர வாகோடே அளித்த புகாரின் பேரில், பேராசிரியர் சூர்யநாராயண் டூலா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் (BNS 108) மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகத் தனது மகன் மீது பேராசிரியர் சாதிய பாகுபாடு காட்டி மனரீதியாகத் துன்புறுத்தியதாகத் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்; ஆனால், பேராசிரியர் தேர்வு விதிகளின்படியே செயல்பட்டார் என ஐஐடி பாம்பே ஆசிரியர் மன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
