LATEST NEWS
திமுக, அதிமுக-வை திட்டியதால் வந்த வினை…கட்சியை விட்டே தூக்கிடுவேன்…சட்டப்பேரவையில் மௌனம்… மேடையில் அதிரடி…லயோலா மணியிடம் காட்டிய அந்த ‘ரூத்லெஸ்’ முகம்… பின்னணி என்ன?…
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் நாளை தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கிறார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், தவெகவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் இன்று ‘வாகை தலைவனுக்கு வாழ்த்தரங்கம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தவெக அரசின் அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய் குறித்த தங்களது வாழ்த்துகளையும், சுவாரசியமான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, சந்தித்த முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக அரியணை ஏறிய விஜய்யின் அரசியல் பயணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் அவர் கடைப்பிடிக்கும் மௌனம் ஆகியவை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த வாழ்த்தரங்க மேடையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் நாகரிகம் குறித்து முதலமைச்சர் விஜய் தனக்குக் கீழ் உள்ள நிர்வாகிகளுக்குக் கொடுத்த அதிரடி டோஸ் பற்றிய ரகசியம் ஒன்றை உடைத்தார்.
முன்னதாக விவாத மேடை ஒன்றில் மாற்றுக்கட்சியினரைத் தரக்குறைவாகப் பேசிய தவெக நிர்வாகி லயோலா மணியை நேரில் அழைத்துக் கண்டித்த விஜய், “மாற்றுக்கட்சியினரை ஒருபோதும் தரக்குறைவாகப் பேசக்கூடாது; தப்பித்தவறி இனிமேல் அப்படிப் பேசினால் கட்சியை விட்டே தூக்கிவிடுவேன்” என்று எச்சரித்ததாக ராஜ்மோகன் குறிப்பிட்டார். திமுக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளைத் திட்டிய தன் கட்சி நபரையே விஜய் கண்டித்த விதம் தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். அரசியல் களத்தில் விமர்சனங்கள் எழுந்தாலும், நாகரிகமான அரசியலையும் கண்ணியமான நிர்வாகத்தையும் முதலமைச்சர் விஜய் முன்னெடுத்து வருகிறார் என்பதையே இச்சம்பவம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
