LATEST NEWS
இன்சூரன்ஸ் கம்பெனி தப்பியது..! தந்தையின் அலட்சியத்தால் ரூ.25 லட்சம் ஆப்பு… நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
கடந்த 2018-ஆம் ஆண்டு மஞ்சுநாத் என்பவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தனது மனைவி மஞ்சுளாவை பின்னால் அமரவைத்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த மனைவி மஞ்சுளா உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தம்பதியரின் இரண்டு குழந்தைகள் மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், குழந்தைகள் பெறவேண்டிய சுமார் ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையை விபத்தை ஏற்படுத்திய தந்தையே வழங்க வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனம் வழங்கத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து குழந்தைகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குழந்தைகள் தரப்பு வழக்கறிஞர், “Pay and Recover” கொள்கையின்படி காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். ஆனால், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது காப்பீட்டு ஒப்பந்த விதியை மீறிய செயல் என்றும், விபத்தை ஏற்படுத்திய தந்தையே வாகன உரிமையாளராகவும் இருப்பதால் இச்சூழலில் காப்பீட்டு நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ பொறுப்பு இல்லை என்றும் காப்பீட்டு நிறுவனம் எதிர்த்து வாதிட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சிவசங்கர் அமரன்னவர், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டார். “Pay and Recover” கொள்கை என்பது பொதுவாக பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவதாகும்; ஆனால் இவ்வழக்கில் விபத்திற்குப் பொறுப்பான தந்தையின் மீதே நேரடி சட்டப் பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், காப்பீட்டு நிறுவனத்திற்குப் பொறுப்பு இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவது போக்குவரத்து விதிமீறல் மட்டுமல்லாமல், விபத்து நேர்ந்தால் காப்பீட்டுப் பாதுகாப்பையும் முழுமையாக இழக்க நேரிடும் என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.
