CRIME
“குழந்தை எனக்குப் பெரும் சுமை” அவளே பிரிஞ்சி போயிட்டா… மனைவியின் பிரிவால் இரண்டரை வயது மகனை உயிரோடு கொளுத்திய தந்தை கைது..!!
குஜராத் மாநிலத்தின் வாவ்-தராத் மாவட்டத்திலுள்ள சுயிகாம் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு மிகக் கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் ராவல் என்ற நபர், தனது இரண்டரை வயது மாசான நவ்கன் என்ற ஆண் குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளார். இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, கொலைக்கான ஆதாரங்களை முற்றிலும் அழித்து மறைப்பதற்காக, அக்குழந்தையின் உடலை அங்குள்ள ஒரு மயானத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் புதைத்துள்ளார்.
இந்தக் கொடூரக் கொலை சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் மாமாவான பாபு ராவல் என்பவர் சுயிகாம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரிலேயே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து குற்றவாளியான தந்தையை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இந்தத் துயர சம்பவத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அசோக் ராவலின் மனைவி, குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து சில காலமாகத் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால், தாயில்லாத நிலையில் அக்குழந்தையைத் தனியாக வளர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான தந்தை, குழந்தையைத் தனக்குக் கிடைத்த ஒரு பெரிய சுமை ஆகவும் கருதியுள்ளார். இந்த மன உளைச்சல் மற்றும் ஆத்திரத்தின் காரணமாகவே அவர் தனது சொந்த மகனையே பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்யும் மிகக் கொடூரமான முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
