LATEST NEWS
2024 கொலை வழக்கிற்கு 2026-இல் பழிவாங்கல்…! ஓசூரிலிருந்து விடுமுறையில் வந்த சிறுவன் வெட்டிக் கொலை…!மாமாவுக்காக சண்டைக்குப் போய் கொலையில் முடிந்த விவகாரம்…!போலீசார் நடத்திய நள்ளிரவு அதிரடி வேட்டை…!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, பைக் கேட்டு வரவழைக்கப்பட்ட ஐடிஐ (ITI) மாணவர் ஒருவர் டாஸ்மாக் கடைக்கு அருகில் வைத்து மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமநாடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்-மகேஸ்வரி தம்பதியரின் 17 வயது மகன் அன்புச்செல்வன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், பைக் எடுக்கச் சென்ற இடத்தில் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னால் இரண்டு வருடங்களுக்கு முந்தைய பழிவாங்கும் முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு, அன்புச்செல்வனின் தாய் மாமா முருகானந்தத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கும் இடையே ‘பவர் பிளாக்’ கல் பதிக்கும் வேலைக்கான ஊதியத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாமாவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட அன்புச்செல்வனும், முருகானந்தமும் சேர்ந்து சத்யராஜை பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டு, அன்புச்செல்வன் மீது வழக்கு நிலுவையில் இருந்தது.
கொலை வழக்கில் சிக்கியதால் கிராமத்தில் இருந்தால் ஆபத்து நேரிடலாம் எனக் கருதி, அன்புச்செல்வனை அவரது பெற்றோர் ஓசூருக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில், நீதிமன்ற வழக்கின் விசாரணைக்காக ஓசூரிலிருந்து 10 நாட்கள் விடுமுறையில் நேற்றுதான் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அவர் வந்த அன்றைய தினமே இரவு நேரத்தில், அவரது நண்பர்கள் சிலர் அன்புச்செல்வனின் பைக்கை வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர், பைக்கை திருப்பித் தருமாறு அன்புச்செல்வன் கேட்டபோது, பெருமாநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்து எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை நம்பி பெருமாநாடு டாஸ்மாக் பகுதிக்கு அன்புச்செல்வன் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தலை மற்றும் கைகளில் கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பதிம்பொருவ சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்யராஜ் கொலையுண்டதற்குப் பழிவாங்கவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதா, அல்லது பைக்கை வாங்கிச் சென்ற நண்பர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் சிலரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
