CINEMA
“திரையுலகை உலுக்கிய பேரதிர்ச்சி! அஞ்சா நெஞ்சன் கே. ராஜன் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்…”மரணம் தீர்வுவல்ல… !ஏ.எல். அழகப்பன் உருகம்ம் …!
தமிழ் சினிமா உலகில் எப்போதும் கம்பீரமாகவும், அஞ்சாமலும் வலம் வந்த மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்கள், தனது 85ஆவது வயதில் சென்னையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடையாறு ஆற்றில் குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், தீயணைப்புத் துறையினர் அவரது உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எப்போதும் துணிச்சலோடு பேசும் ஒரு மூத்த ஆளுமையின் இந்த விபரீத முடிவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மறைவு குறித்துத் தற்போதைய தயாரிப்பாளரும், கே. ராஜனின் நெருங்கிய நண்பருமான ஏ.எல். அழகப்பன் மிகுந்த மனவேதனையுடன் சில அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “கே. ராஜன் எதற்கும் பயப்படாத ஒரு தைரியசாலி. விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருந்து பல மேடைகளில் யாருக்கும் அஞ்சாமல் உண்மைகளைப் பேசியவர். அவர் நல்ல செல்வச் செழிப்புடன் தான் வாழ்ந்து வந்தார். எனக்குத் தெரிந்தவரை அவருக்குக் கடனோ அல்லது பண நெருக்கடியோ எதுவும் கிடையாது; சொந்தமாகப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். அப்படிப்பட்டவர் இந்த முடிவை எடுத்திருப்பதை நம்பவே முடியவில்லை” என்று உருகியுள்ளார்.
பணப் பிரச்சனை இல்லாத அவருக்குக் குடும்பப் பிரச்சனை காரணமாக ஏதேனும் மன உளைச்சல் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஏ.எல். அழகப்பன் பேசியுள்ளார். கடந்த முறை அவரைச் சந்தித்தபோது, வீட்டில் ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் காரணமாகப் கடந்த ஒரு வருடமாக அவர் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், மகள் வீட்டிலிருந்துதான் அவருக்கு உணவு வந்து கொண்டிருந்தது என்றும் ராஜன் தன்னிடம் மனவருத்தத்தோடு பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், அஞ்சா நெஞ்சம் கொண்ட கே. ராஜன் ஏன் இத்தகைய கடுமையான முடிவை எடுத்தார் என்பது தமக்குப் புரியவில்லை என்றும், அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்றும் இன்னும் பேச முடியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
