CINEMA
“உண்மை தெரிஞ்சா தாங்கமாட்டீங்க…!””எங்களை விஷம் வச்சு கொன்னுடுங்க!…”பிரெஸ் மீட் வைக்கப்போவதாக நடிகர் பாலா போட்ட வெடிகுண்டு! திரையுலகில் பரபரப்பு…!
அஜித்தின் ‘வீரம்’ படத்தில் அவரது நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பாலா. பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பாலாவுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ரிதா என்ற பாடகியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு, பாலா அண்மையில் கோகிலா என்பவரை மறுமணம் செய்து கொண்டு தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்நிலையில், தனது முன்னாள் மனைவி அம்ரிதா தனக்குத் தொடர்ந்து பண ரீதியாகப் பெரும் தொந்தரவு கொடுத்து வருவதாக பாலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாயை ஏற்கனவே மகளின் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் (FD) செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள பாலா, தற்போது முன்னாள் மனைவி தன்னிடம் 120 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பாலாவுக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மிகுந்த வேதனையுடன் பேசியுள்ள பாலா, “எல்லா பிரச்சனைகளையும் நான் இதுவரை உள்ளேயே பூட்டி வைத்திருக்கிறேன். இனிமேலும் யாராவது என்னைப் பற்றி தவறாகப் பேசினால், ஒட்டுமொத்த உண்மைகளையும் செய்தியாளர்களைச் சந்தித்து உடைப்பேன். அந்த உண்மைகள் வெளியில் வரக்கூடாது என்று நினைத்தால், என்னையும் என் தற்போதைய மனைவியையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள்” என கண்ணீர்மல்கக் கூறியுள்ளார். பாலாவின் இந்த உருக்கமானப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
