CINEMA
அவர் வேற லெவல் மனுஷன்…”வலிமை ஷூட்டிங்கில் புகழுக்கு நடந்த அந்த விஷயம்… அஜித்தின் அசல் முகம் இதுதான்…”குக் வித் கோமாளி புகழ் கேட்ட கேள்வி… அஜித் கொடுத்த நறுக்கு பதில்…!
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ள நிலையிலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் தள்ளிப்போகிறது. சமீபத்தில் வெளியான ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், அஜித்தின் மார்க்கெட் மதிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இப்படத்திற்கு அவர் முதலில் கேட்ட 180 கோடி ரூபாய் சம்பளத்தைத் தர தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. தற்போதைய திரைத்துறை வட்டாரங்களின்படி, இந்தச் சம்பள நெருக்கடி காரணமாக அவர் தனது சம்பளத்தை 150 கோடியாகக் குறைத்து, தற்போது 110 கோடி ரூபாய்க்கு வந்து நிற்க சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
சினிமாவில் அஜித்திற்குத் தோல்விகள் ஒன்றும் புதியவை அல்ல. ஒரு காலத்தில் ஜனா, ஜி, ஆழ்வார், பரமசிவம் எனத் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்தபோதும், ரசிகர்கள் அவரது நிழலாகவே அவருக்குப் பின்னால் நின்றார்கள். இப்போதும் ஆதிக் ரவிச்சந்திரனின் படம் மூலம் அவர் மீண்டும் ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்று தனது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. ஒருவேளை இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், கோலிவுட்டிலேயே தனித்துவமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அஜித்தை விட்டு அவரது ரசிகர்கள் என்றுமே விலகப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
இதற்கிடையில், அஜித்தின் மனிதநேயம் குறித்து குக் வித் கோமாளி பிரபலம் புகழ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ‘வலிமை’ படப்பிடிப்பின் போது, தூக்கமின்மையால் கண்கள் சிவந்திருந்த புகழை ஓய்வெடுக்கச் சொல்லி அஜித் கவனித்துக் கொண்டதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும், அவரிடம் “ஏன் சார் நீங்கள் காமெடி படம் பண்ணக்கூடாது, நானும் நடிப்பேனே” என்று புகழ் கேட்டதற்கு, அஜித் மிகவும் எதார்த்தமாக, “நான் நிறைய காமெடி படங்கள் பண்ணியிருக்கேனே புகழ், என்னுடைய ஓடாத படங்களெல்லாம் காமெடி படங்கள்தானே” என்று பதிலளித்தாராம். எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், சக கலைஞர்களைத் தன் கம்ஃபோர்ட் ஸோனில் வைத்திருக்கும் அஜித்தின் இந்த ஜென்டில்மேன் குணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
