LATEST NEWS
மாடுகள் இல்லை.. அது எங்க குடும்பம்..! பண்டிகை நாளில் நேர்ந்த பெருந்துயரம்…விவசாயியின் கண்ணீர் துடைத்த முதல்வர்… 2 எருதுகளை இழந்து தவித்த குடும்பத்திற்கு சந்திரபாபு நாயுடு உதவிக் கரம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் மஞ்சல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குரவா சுரேஷ் என்பவரின் குடும்பத்தினர் வளர்த்து வந்த இரண்டு எருதுகள் துங்கபத்ரா நதியில் மூழ்கி திடீரென உயிரிழந்தன. விவசாயிகளுக்குத் தங்கள் கால்நடைகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல, அவை குடும்ப உறுப்பினர்களைப் போன்ற உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டவை. இந்த எருதுகளின் மரணத்தால் உடைந்து போன விவசாயக் குடும்பத்தினர், அவற்றின் உடல்களைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுத மனதை உருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடுவின் மனம் உருகி, அந்த விவசாயக் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன் உதவிக் கரமும் நீட்டியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விவசாயத் தொடக்கத்தைக் குறிக்கும் மற்றும் கால்நடைகளை வழிபடும் புனித நாளான ‘ஏருவாகா பூர்ணிமா’அன்று இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, “நமது கலாச்சாரத்தில் பசுக்களையும் எருதுகளையும் நாம் வெறும் விலங்காகப் பார்ப்பதில்லை, செல்வமாகவும் விவசாயத்தின் முதுகெலும்பாகவும் கருதுகிறோம். குடும்ப உறுப்பினர்களைப் போல வளர்க்கப்பட்ட இரண்டு எருதுகளின் திடீர் மரணம் மற்றும் அன்னதாதாக்களின் இந்தத் துயரம் என் இதயத்தை மிகவும் வலிக்கச் செய்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
விவசாயிக்கு ஏற்பட்ட இந்த இழப்பை முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்ற போதிலும், பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பத்திற்கு அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு கர்னூல் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். தங்களின் சொந்தப் பிள்ளைகளைப் போலப் பராமரித்து வந்த எருதுகளை இழந்து தவிக்கும் அந்த ஏழை விவசாயக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தகுந்த நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்த மனிதாபிமான நடவடிக்கை இணையவாசிகளிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
