CRIME
“கணவனைக் கொல்ல கூலிப்படை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி ஆடிய மரண நாடகம்.. சடலத்துக்கு உடையை மாற்றி அவர்கள் செய்த பகீர் காரியம்..!!
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும் அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்தச் சூழலில் ஹேமாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரு கங்காதர் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அப்பலநாயுடு மனைவியைக் கண்டித்ததோடு, கள்ளக்காதலனைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகத் தனது வெளியூர் வேலையை விட்டுவிட்டுச் சொந்த ஊரிலேயே தங்கத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமா, கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுத் தனது காதலனுடன் சேர்ந்து ரூ.1 லட்சம் பணத்தைக் கூலிப்படைக்குக் கொடுத்துள்ளார். திட்டமிட்டபடி, நள்ளிரவில் அப்பலநாயுடுவின் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவர் தூங்கிய பின் 3 பேர் கொண்ட கூலிப்படையை வீட்டிற்குள் வரவழைத்துக் கழுத்தை நெரித்தும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கொலை நடந்த பிறகு, குற்றத்தை மறைப்பதற்காக ஹேமா வீட்டிலிருந்த ரத்தக்கறைகளைச் சுத்தம் செய்துவிட்டு, கணவரின் உடலிலிருந்த ஆடைகளை மாற்றிப் புதிய ஆடைகளை அணிவித்துள்ளார். மறுநாள் காலை அக்கம் பக்கத்தினருடன் எதுவும் தெரியாதது போல இயல்பாகப் பேசி காபி குடித்து நடித்துள்ளார். ஆனால், அப்பலநாயுடுவின் அண்ணன் மகன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தார். உடம்பில் இருந்த காயங்களை வைத்துப் பிரேதப் பரிசோதனை செய்ததில் அது கொலை என உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஹேமா குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது ஹேமாவையும் அவரது காதலன் கங்காதரையும் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
